தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.


மனித பலவீனங்கள்
உலகத்து உயிர்களின் மிகவும் பலமானவனும் மனிதன்தான் மிகவும் பலவீனமானவனும் மனிதன்தான். காலத்துக்குக் காலம் அவனது பலத்தைவிட அவனது பலவீனம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஒன்றும் இல்லாதபோது வலிமை யோடு வாழ்ந்தவன் ஒவ்வொன்றாக வந்து சேரும்போது பலவீனம் நிறைந்தவனாக, இயலாதவனாக ஆகிவிடுகின்றான்.

இளமைக்காலத்தில்
இளமைக்காலத்தில் தைரியமாக இருந்தவன் முதுமைக்காலத்தில் பலவீனமாகிப் போகிறான். தன்னை இழந்தே விடுகிறான். பல்வேறு பந்தங்களும் பாச உணர்வுகளும் அவனை வீழ்த்தி விடுகின்றன. தான் ஆசைப்பட்டதை அடைவதற்காகத் தான் உயிராகப் போற்றி வந்த கொள்கைகளையே விட்டுக் கொடுக்கிறான். நாளடைவில் விட்டும் விடுகின்றான். மனிதனாக இருந்தவன் நாளடைவில் மனித உருவத்தோடு மட்டும் இருக்கிறான்.

ஆசையே முதல் காரணம்
பலவீனங்களுக்கு ஆசையே காரணமாக அமைகின்றது. தொண்டனாக இருந்தவரை குறைபாடுகளை எடுத்துச் சொன்னவன். அவனே தலைவனாக ஆனவுடன் குற்றங்களைப் பேச மறுக்கிறான். குற்றங்களை எடுத்துச் சொல்கின்றவர்களை வெறுக்கிறான்.

தலைமைப் பதவியின் சுக போகங்களை அனுபவித்த பின் அந்தப் பதவியையும் விட மனம் வருவதில்லை. மாறாக குற்றங்களையே நியாயப்படுத்திப் பேசுகின்றான். மிகப் பெரிய நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்யும். ஒரு வீட்டில் இருப்பதில்லையா? என்று தன் குறைகளை நிறைபோலக் காட்டிச் சமாதானம் தேடுகிறான்.

சமுதாயம் அடுத்து நிற்கிறது
மனித பலவீனத்தற்குச் சமுதாயம் ஒரு காரணமாக இருக்கிறது. தனிமனிதன் தன் வாழ்க்கையைச் சமுதாயத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறான். தன்னை ஒத்தவர்களின் வாழ்க்கை வசதிகளைப் பார்த்ததும் தனக்கும் அப்படி இல்லையே என்று எண்ணுகிறான். அவற்றை அடைய ஏதேனும் வழி உண்டா என்று கருதுகிறான். கவசம் போன்று இருந்த மனம் இந்த ஆசைகளால் துளைக்கப்பட்டு, அவன் மனம் ஓட்டையாய் சல்லடைபோல் ஆகிவிடுகின்றது. எத்தனை நல்ல கருத்துகளைக் கொண்டு அந்த ஓட்டைகளை அடைத்தாலும் அடைக்க முடிவதில்லை. பலவீனம் மிகுதியாகிக் கொண்டே போகிறது.

இன்னும் சில இடங்களில் மனைவி மக்கள் உற்றார் உறவினர் இவர்கள் எல்லாமாகச் சேர்ந்து ‘இப்படியே பிடிவாதமாக இருந்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்? உங்கள் ஒருவரால் மட்டும் இந்த பலவீனத்தைத் திருத்தி விட முடியும் என நம்புகிறீர்களா?’ என்ற கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார்கள். சமுதாயம் அவனது சபலங்களுக்குப் பக்கத்துணையாக வருவதுபோல உணர்கிறான்.

சூழ்நிலைகள்
ஏற்கனவே அரைகுறை மனதோடு இருந்தவனுக்கு இந்தக் கேள்விகள் எல்லாம் ஆதரவாகின்றன. அவனைத் தயார் நிலைக்கு வரத் துணை செய்கின்றன. அவனுடைய பல்வேறு சூழ்நிலைகள் அவனைத் தடுமாறவைக்கின்றன. அவன் தனக்குள்ளே ஒரு சமாதானத்தை வரவழைத்துக் கொள்கிறான். தன் பலவீனத்திற்குத் தான் கற்ற கல்வியை, அறிவைப் பயன்படுத்த முனைகிறான். யாருக்கும் தெரியாமல் செய்தால் என்ன என்று தொடங்கி எல்லோருக்கும் தெரிந்தால்தான் என்ன என்று துணிந்து செய்கிறான். விதிகளை மீறுவதையே தன் திறமையாகப் போற்றிக் கொள்கிறான்.

“”பலவீனம் மனித மனத்தின் இயல்பான் ஒன்றா என்றால் இல்லை. அறத்திலும் உணர்விலும் உண்மையிலும் நேர்மையிலும் நம்பிக்கை குறையக் குறைய மனிதனுக்கு பலவீனம் தோன்றுகிறது.””

யார் செய்வது?
இத்தகைய பலவீனத்திற்கு யார் ஆளாகிறார்கள்? இல்லாதவர்களா? என்றால் இல்லை. இருக்கிறவர்கள்தான் அதிகம் ஆளாகின்றார்கள். ஒழுக்கம் இல்லாதவன் தான் ஆளாகிறான் என்றால் ஒழுக்கமாக இருந்தவர்களும் ஒருகால கட்டத்தில் தவறிப்போகிறார்கள். அதனால் பலவீனம் என்பது எல்லோருக்குமே இருக்கின்ற பொதுவான ஒன்றாக இருக்கிறது. அதற்குக் கோழைத்தனம், தவறான ஆசை, மனப் போக்கு இவைகள்தான் அடிப்படைக் காரணங்கள். இடம் கிடைத்தால் போதும். பலவீனம் அத்தகைய உள்ளங்களை அரியணையாக்கி ஏறி அமர்ந்து கொள்ளும். அதனால் தான் மனத்தை எப்போதும் வெற்றிடமாக வைத்துக் கொள்ளக் கூடாது என்பது.

எதில் பலவீனம்
சிலர் நாச்சுவைக்கு அடிமைப்பட்டு குடிப்பது போன்ற பழக்கங்களுக்கு ஆளாகித் தங்கள் குடும்பத்தையே துன்பத்திற்கு உள்ளாக்குகிறார்கள். இன்னும் சிலர் உடல் சுவைக்கு ஆசைப்பட்டு தவறான வழியில் இன்பம் அனுபவிக்க விரும்பித் தங்கள் தகுதியை இழக்கவும் தயாராகி விடுகிறார்கள். வேறு சிலர் பழைய காலத்தில் மண்ணாசை என்பார்களே அதுபோல பொருளாசைக்கு தான் சுகமாக வாழ விரும்பி தவறான வழியில் பணம் சேர்க்க முற்பட்டுப் பலவீனத்திற்கு ஆளாகிறார்கள்.

இப்போதெல்லாம் பதவி அல்லது பெயர் விளம்பரம் இவற்றிற்கு ஆசைப்பட்டு மிகப் பெரிய மனிதர்கள் கூடத் தங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவும் தயாராகி விடுகிறார்கள். இப்படி இன்னும் சில அடிப்படைகளில் பலவீனங்கள் தலைகாட்டுகின்றன.

பலவீனம் இயல்பானதா?
பலவீனம் மனித மனத்தின் இயல்பான ஒன்றா என்றால் இல்லை. அறத்திலும் உணர்விலும் உண்மையிலும் நேர்மையிலும் நம்பிக்கை குறையக் குறைய மனிதனுக்கு பலவீனம் தோன்றுகிறது. வழிகாட்டிகளே, தலைவர்களே பலவீனப்படும்போது அது தொண்டர்களையும் பாதிக்கிறது. பெற்றோர்களே பலவீனப்படும்போது அது குழந்தைகளையும் பாதிக்கின்றது. ஒரு குடும்பம் பலவீனப்படும்போது அது அந்தத் தெருவையே பாதிக்கின்றது. இது ஒரு தொற்று நோய் போன்றது.

இந்த நோயைப் போக்க வழி
மனிதன் நியாயத்திலும் நேர்மையிலும் ஆழ்ந்த பற்றுக் கொள்ள வேண்டும். தவறான வழியில் வருகின்றபொருள்களும், சுகமும் வெளிப்படையில் மகிழ்ச்சி தருவதுபோல் தோற்றமளித்தாலும் தன் மனசாட்சியின் முன் அவை என்ன பாடுபடுகின்றன என்பதை எண்ணிப் பார்த்துத் திருந்த வேண்டும்.

பலவீனப்பட்டுத் தவறான வழியில் சென்றவர்கள் இறுதியில் அடைந்த தோல்வியை, அவர்கள் குடும்பம் சின்னாபின்னப்பட்டுப் போனதை, அந்தந்த பலவீன மனிதர்கள் முன்னாலேயே அவரது மனைவி மக்கள் நடந்து கொள்கின்ற முறையை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும். ‘தீயவழியில் வருபவை தீய வழியில் செல்லும்’ என்றஉலக நியதியை மாற்றமுடியாது என்பதை உணர்ந்து திருந்த வேண்டும்.

பெரியோர்களை நினைவு கூர்க
நம்முடைய முன்னோர்களில் எத்தனையோ பேர் எளிமையாக அதே நேரத்தில் நேர்மையாக, பலவீனப்படாமல் மன உறுதியோடு வாழ்ந்தார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கள் அவ்வாறு வாழ்ந்ததற்குக் காரணம் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் நேர்மையாக வாழ்ந்ததால் வாய்த்தது என்பதை இந்தப் பலவீன மனிதர்கள் உணர வேண்டும்.

அரிச்சந்திரனும் காந்தியும் மட்டும்தான் மன உறுதியாக இருந்தவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். பெயர் தெரியாத எத்தனையே அரிச்சந்திரர்களும் காந்திகளும் இந்த நாட்டில் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் போதும் என்ற மனதோடும், எதையும் தாங்கும் இதயத்தோடும் இருக்கிறார்கள். அவர்களை வழிகாட்டிகளாகக் கொண்டு பலவீனமான மனதை வலிமையுள்ளதாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

உதறி எறிக:
நம்மிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் தவறான முறைகேடான ஆசைகளை உதறி எறிந்துவிட வேண்டும். சிறிய அளவே ஆனாலும் உழைத்துப் பெறுவதைப் பெருமையாகக் கொள்ள வேண்டும். உண்மையுள்ள இடத்தில்தான் வலிமையும் இருக்கும். பலவீனம் ஒழிய வேண்டுமானால் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.


Leave a Comment Read Moreவிருப்பம் உள்ள துறையில் இறங்கினால் வெற்றி பெற்றுவிட முடியும் என்பது பொதுவான நம்பிக்கை. தான் விரும்பும் துறையாக இருந்தாலும் அதில் தயக்கமில்லாமல் இறங்குவதற்குப் பெயர்தான் தன்னம்பிக்கை. நமக்கு விருப்பமான துறையை நெருங்கிப் பார்க்கிறபோது அஇலிருக்கிற நுணுக்கங்கள், வளர்ச்சிகள் அனைத்தும் நம்மை பிரமிக்க வைக்கும்.

முனைபுடன் ஈடுடத் தடங்குகிறவர்கள் முன்னேறுவதா பின்னேறுவதா என்று முடிவு செய்ய வேண்டிய இடம் இதுதான். இத்தனை உயர்ந்த விஷயங்கள் இருக்கிற துறையில் நாம் நுழைகிறோம் என்கிற பிரமிப்பு. பெருமித உணர்வை ஏற்படுத்தினால் அவர்கள் தொடர்ந்து அதே பாதையில் செல்கிறார்கள், வெல்கிறார்கள்.

“இந்தத்துறையில் நாமா?” என்கிற பிரமிப்பு பீதியாக மாறுகிற போது அவர்கள் தயங்கிப் பின்வாங்குகிறார்கள். “நம்மால் முடியாது” என்று விலகி விடுகிறார்கள்.

நாம் – ந்து கனவு – அதற்கான முயற்சி, இந்த மூன்று குறித்தும் ஏற்படுகிற தெளிவுதான் வெற்றிக்கு வழிவகுக்கும். தொடங்கும் வரை கனவு காணலாம். தொடங்கிவிட்டால் விருப்பு வெறுப்பில்லாமல் செயல்படவேண்டும். “வெற்றியைத் தொட்டுவிடப் போகிறோம்” என்கிற உறுதி உள்ளத்தில் ஊற்றெடுக்க வேண்டும். ரசனையோடும், படைப்பாற்றலோடும் பணிகளை அரங்கேற்ற வேண்டும். வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் பதட்டமில்லாமல் எதிர்கொள்ளப் பழக வேண்டும்.

இந்த அணுகுமுறை எந்தத் துறைக்கும் பொருந்தும். பந்தயக் குதிரையின் கால்களில் இருக்கும் அசுர பலமாய் செயலாற்றல், கடிவாளமாய் மன உறுதி, அதன் கம்பீரமான தோற்றமாய் தன்னம்பிக்கை இத்தனை அம்சங்களோடும் புழுதி பறக்கப் பயணம் தொடங்குங்கள்…

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.

Leave a Comment Read More

மாற்றங்கள் ஏமாற்றங்களிலிருந்துதான் பிறக்கின்றன. தோல்விகள் இல்லாமல் வெற்றிகள் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், எதார்த்த வாழ்வில் நம்முடைய எதிர்பார்ப்பு களுக்கு மாறாக ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் அதை எளிதாக ஏற்றுக் கொள்ள நம்மால் முடிவதில்லை. அதைக் கடந்து வர முடியாமலும் அவதிப்படுகிறோம்.

அத்தகைய சிக்கலான சூழலில் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான உளவியல் அறிஞர்களின் ஆலோசனைகள் இவை. பின்பற்றுங்கள்... ஏமாற்றங்களைக் கடந்து சென்று வெற்றிப் படியேறுங்கள்!

மனநிலையை சமன்படுத்துங்கள்

முதலில் கொந்தளிப்பான மனநிலையில் இருந்து மாறி சமநிலையாக மனதைக் கொண்டு வாருங்கள். பிரச்னையின் தீவிரம், கால அளவை கணக்கில் கொண்டு அதற்கான வழிமுறைகளை யோசியுங்கள். குறிப்பிட்ட கால அளவில் தானாகவே சரியாகிவிடக்கூடிய பிரச்னை என்றால் அதன் வழியில் விட்டுவிடலாம். பிறரிடம் சொல்வதால் தீரக்கூடியதாக இருக்கும் பட்சத்தில் நெருங்கியவரிடம் பகிர்ந்துகொள்ளலாம். வெளியில் காட்ட முடியாத உணர்வுகள் என்றால், ஒரு வெள்ளைத் தாளில் எழுதி வைக்கலாம்.

இதன்மூலம் கோபம், இயலாமை மற்றும் விரக்தியை குறைத்துக் கொள்ள முடியும். அதேநேரம் சமூக வலைதளங்களில் உங்களின் ஏமாற்றங்களைக் கொட்டுவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஏமாற்றம் நிகழ்ந்த கணத்தில் உங்களது வாழ்வில் கிடைத்த நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள். அவற்றுக்கு நன்றி சொல்லுங்கள்.

எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளவும் இதன்மூலம் உளவியல்ரீதியாக பயிற்சி பெற்றுக் கொள்வது எதிர்கால ஏமாற்றங்களைத் தவிர்க்க உதவும். பாதகம், சாதகம் இரண்டு சூழலுக்கும் தயாராக இருக்கும்போது நல்லது.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.

Leave a Comment Read More