தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

ஒத்தி வைப்பதை நாம் ஒத்தி வைத்தால் ஜெயிக்கலாம்.


Image result for ஒத்தி வைப்பதை ஒத்தி வைப்போம்


நம் வாழ்க்கையிலும் பணியிலும் கடமையை உணர்ந்து முழுமன ஈடுபாட்டுடன், ஆர்வத்துடன் செயல்பட்டால்தான் முன்னேற்றம் சுலபம். அப்புறம் பார்க்கலாம். பிறகு செய்யலாம் என ஒத்தி வைத்தே பெரும்பாலோர் பேசுவதைக் கேட்டிருப்போம். ஒத்தி வைத்தலை ஒத்தி வைத்து தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வழிகள் இதோ.

ஒத்தி வைத்தல் (Procrastination) விளக்கம்

நம் அனைவருக்குமே தெரியும். வாழ்க்கையில் ஏதாவது ஒரு செயலைச் செய்வதையோ ஓர் எண்ணத்தை, கருத்தை வெளியிடுவதையோ உரிய நேரத்தில் பேச வேண்டியதையோ ஏதாவதொரு கற்பனையான காரணத்தால் செயலுக்கு கொண்டு வராமல் பிறகு செயல்படுத்தும் நோக்கத்தில் கைவிடுதலே (Dropped) ஒத்தி வைத்தல் எனக் கூறலாம். கையில் ஒரு பீங்கான் பாத்திரம் வைத்துள்ளோம். இதை வைப்பது என்பது மீண்டும் உபயோகிக்கும் எண்ணத்தில் மெதுவாக வைப்பது, கைவிடுதல் என்பது, மீண்டும் உபயோகிக்க இயலாமல் உடைந்து விடும் நிலையைக் குறிப்பது இன்று ஒத்தி வைப்பது முடியாது என்பதன் மறுபெயராக உள்ளது.

காரணங்கள்

சிற்பி ஒருவர் தான் சிலை செதுக்க வேண்டிய கல்லைப் பார்க்கிறார். மலைப்பாக இருக்கிறது. இந்தக் கல்லில் ஒரு சிற்பத்தைச் செதுக்க வேண்டுமா? பிறகு பார்க்கலாம் என ஒத்தி வைக்கிறார்.

நண்பர் ஒருவருக்கு திடீரென அழைப்பு. பணி காரணமாக 10 நாட்கள் வெளிநாடு சென்று வர, மொழி, தட்ப வெப்பநிலை, விமானப் பயண விபத்து எனப் பல காரணங்களைத் தனக்குள் கூறி வெளியில் குடும்பத்தில் தற்சமயம் இவரது கவனம் அவசியம் தேவையென மறுத்துவிடுகிறார்.


அலுவலகத்தில் பணி புரிபவர்கட்கு விளையாட்டுப் போட்டி ஏற்பாடு செய்யப் படுகிறது. மியூசிக்கல் சேர். ஒரு வருடம் முன் இதேபோல் வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெற்ற தோல்வியால் கலந்து கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது.

காலை 5 மணிக்கு எழுந்தால் ‘சந்திர கிரஹணம்’ முழுமையாகப் பார்க்க வாய்ப்பு ஆனாலும் அந்த நேரத் தூக்கத்தை அந்த ஒருநாள் தியாகம் செய்ய மனமில்லாமல் சோம்பலால் எழவில்லை. இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் உலக்கோப்பையில் வங்காளதேச அணியுடன் விளையாட்டி தோற்றது. காரணம் அதீத தன்னம்பிக்கை. (Over Confidence).

இதுபோல, ஒத்தி வைப்பதற்கான காரணங்கள் பல உண்டு. முக்கியமானவை மலைப்பு; முன் அனுபவமின்மை, தான் பெற்ற தோல்வி, பிறர் பெற்ற தோல்வி, சோம்பல், விளைவு தெரியாத நிலை, பிறரை நம்பாதது. தன்னம்பிக்கையின்மை முதலியன.

விளைவுகள்

ஒத்தி வைப்பதால் வரும் விளைவுகளை நினைத்தாலே நம்மீது நமக்கே வெறுப்பு உண்டாகும்.

மறைந்த முன்னால் பிரதமர் ஒருவர் எவ்வளவு முக்கியமான விசயமானாலும் ஒத்தி வைப்பதில் பெயர் பெற்றவர் என்பதை நாம் பலரும் அறிவோம். சில வேலைகளை முடிக்கக்கூடாது என்றால் ஒரு சிலரிடம் ஒப்படைத்து விட்டால் போதும். கச்சிதமாக முடிக்காமல் பார்த்துக் கொள்வார்கள்.


கடந்த ஒரு வருடமாக கோவையில் நிலங்களின் விலைகள் ஏறிவிட்டன. நல்ல விலை வந்தும், இன்னும் விலை ஏறும் என்ற பேராசையால் விற்காமிருந்ததால், திடீரென விலை குறைந்து பொருள் இழப்பை உண்டாக்கும். ஒத்தி வைத்தே பெயர் பெற்ற ஒருவருக்கு நண்பர்கள் மத்தியில் குடும்பத்தில் கெட்ட பெயர் வரும். தொடர்ச்சியாக தனிமை, மன வியாதி, உடல் நோய், வெறுப்பு என வாழ்க்கை பிடிப்பில்லாமல் மாறி விடும்.

கட்டைக்கரி தயாரிக்க விறகுக்கு நெருப்பு வைத்து எரிப்பர். குறிப்பிட்ட நிலையில் நெருப்பை அணைத்து கரியாக எடுப்பார்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஒத்தி வைத்தால் சாம்பல் தான் கிடைக்கும்.

ஒரு வீட்டில் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தனர். நல்ல இடமும் வந்தது. இதைவிட நல்ல இடமாக வருமா என இந்த இடத்துக்கு முடிவு எதுவும் கூறாமல் ஒத்தி வைத்து காத்திருந்தனர். மாப்பிளை வீட்டார் காத்திருந்து, முடிவு ஏதும் தெரியாததால் வேறு பெண்ணை தேர்வு செய்து விட்டனர். அந்தப் பெண்ணுக்கு சில வருடங்கள் கழித்து சுமாரான இடத்தில் தான் திருமணம் முடிந்தது.

வீட்டில் சேரும் குப்பைகளைப் பெருக்கி சுத்தம் செய்யாவிட்டால் வீதியில் மக்கள் போடும் குப்பைகளை 10 நாட்களுக்கு குப்பை வண்டி வந்து எடுத்துச் செல்லாவிட்டால் எப்படியிருக்கும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். நாற்றமடிக்கும். புழுக்கள் உண்டாகும், சுற்றுச் சூழல் பாதிக்கும்.


இதேபோல் தான் நம் உடலில் கழிவாகச் சேரும் சிறுநீர், மலர் போன்றவைகளை அவ்வப்போது உடலிலிருந்து வெளியேற்றாவிட்டாலும் உடலும் நாற்றமடிக்கும். உள்ளுறுப்புகளும் கெடும்; நோய்கள் பல வரும். ஒத்திவைப்பதால் தாழ்வு மனப் பான்மையை உண்டாகும். ஒரு நிலையில் சாம்பலாகி விடுவோம்.

ஒத்தி வைக்கும் பழக்கத்தை மாற்றும் வழிகள்

ஒன்று ஒத்தி வைப்பதற்கு அடிப்படையாக இருப்பது மலைப்பும் சோம்பலும் என்பதால், அவைகளை முதலில் அகற்றிவிட்டால் ஒத்திவைக்கும் எண்ணம் வராது, என்னால் முடியும்; நான் இதை முடிப்பேன்; இப்போது முடிக்கவில்லையென்றால், வேறு எப்போது முடிப்பது; போன்ற சுய சங்கல்பங்களை தினமும் நம் ஆழ்மனதுக்கு கட்டளையாகக் கூறவேண்டும். இதனால் மன அலையும், உடல் செல்களும் எதற்கும் தயார் என்ற நிலைக்கு உயர்ந்து விடும்.

பிறரைக் குறைகூறாதே!

நாம் பிறரைச் சார்ந்தே செயல்பட்டு வாழ்ந்து வருவதால், வெற்றிக்கு நாமே காரணம் என்றும், தோல்வியெனில் பிறரால் தான் இது நேர்ந்தது எனவும் சமாதானம் செய்து கொள்கிறோம். முதலில் நமது குற்றம் என்ன எனக் கண்டுபிடித்து, அதை ஏற்றுக் கொண்டு மாற்ற முயற்சிக்க வேண்டும். நமது குற்றங்களைப் பிறர் கூறினால் நமக்கு உதவி செய்த அவரை வாழ்த்தி நன்றி கூற வேண்டும். பிறரது குற்றங்களைப் பலர் முன்னிலையில் கூறாமல், தனித்துக் கூறி, திருத்தவும் முயற்சி செய்ய வேண்டும்.

சிறுசிறு பகுதிகளாய் பிரி

வீடு ஒன்றின் முழுத்தோற்றமும் கட்டி முடித்த பின்தான் தெரியும். கட்டுமானப் பணியின் போது தெரியாது. பகுதி பகுதியாகப் பிரித்துச் செய்த வேலைகளின் தொகுப்பே முழு வீடு. அதேபோல் பெரிய வேலைகளை ஒத்தி வைக்காமல் சிறு சிறு பகுதிகளாய் பிரித்துச் செய்தால், மலைப்பின்றிச் செய்து முடிக்கலாம். பிறருக்குப் பணியை ஒதுக்கும்போது, அவர்களது தகுதி, திறமை, செயல்படும் விபரம் ஆகியவைகளை அறிந்து, உறுதி செய்து கொள்ளவும்.

ஆய்வும் ஆலோசனையும்

இடையிடையே பணியின் முன்னேற்றம், பெரியோர் அல்லது முன் அனுபவமுள்ளோரிடம் அறிவுரைகள் ஆலோசனைகள் கேட்பது இவைகளையும் விடாமல் செய்ய வேண்டும். குழப்பம் வந்தால் ஒத்தி வைப்போம். குழப்பமே வராமல் தெளிவான நிலையில் இருந்தால் ஒத்திவைக்கும் எண்ணமே வராது.

புயலைக் கணக்கிடாதே! கரை சேர்!

கடலில் பயணம் செய்வதென்பது சாதாரண காரியமல்ல. வழியில் பல துன்பங்களையும் ஏன் புயல்களையும் சந்திக்க நேரலாம். புயல் வருமே எனப் பயணத்தை ஒத்தி வைக்க முடியுமா? அப்படியே பயணத்தின் போது புயல்வந்தாலும் அதைச் சமாளித்துக் கரை சேர்ந்தால் தான் அவரது துணிச்சலான நடவடிக்கைகள் வெளி உலகுக்குத்தெரியும். எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும் துவக்கம் சிறு அளவில்தான். பெரிய ஆறு; துவங்குமிடம் சிறிய ஊற்று நீர் தான். அழகான, பெரிய சிலை. துவக்கம் முதல் அடிதான். 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் எதுவாக இருந்தாலும் துவக்கம் முதல் அடியில்தான்.

பலரை அன்றாட வாழ்வில் சந்தித்திருக்கிறோம். எதைக் கூறினாலும் இதுங்களா? நானா? என்னால் முடியுமா? என்று நம்பிக்கையில்லாமல் எதிர்மறையாகக் கூறுவர். சிறிது வற்புறுத்தினால் சரி அப்புறமா யோசித்து சொல்கிறேன் என யோசிப்பதையே ஒத்தி வைப்பார்கள்.

தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வழிகள்

சவாலான செயல்கள் ஒப்படைக்கப்படும் போது, அல்லது நம்மை நாடி அவை வரும்போது, அவைகளை நம்மைச் சோதிக்க வருவதாய் எண்ணாமல், நமது திறமைகளை வெளியுலகுக்கு உணர்த்த அருமையானதோர் வாய்ப்பு என எண்ணி மகிழ வேண்டும்.

இதை நான் திறமையாகச் செய்து முடிப்பேன் என அடிக்கடி கூறி நம் உடல் செல்களுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டும்.


ஒரு சிறந்த பேச்சாளர்; ஒரு கூட்டத்தில் மிக அருமையாக, சிறப்பாகப் பேசினார். கூட்டம் முடிந்தபின் வழக்கம்போல் விண்ணைப்பிளக்கும் கரவொலி கடைசியில் ஓர் இளைஞன் தயங்கித் தயங்கி இவரிடம் வந்து, உங்களைப்போல், நானும் சிறந்த பேச்சாளராக வேண்டும்” என்று கூறி, சில வழிகளைக் கூறுமாறு கேட்டான். அவர் கூறினார். “பேச்சாளராக வேண்டுமென்ற எண்ணம் வெறியாக மனதில் இருக்க வேண்டும். தேடிவரும் வாய்ப்புகளை விட நாடிச்சென்று வாய்ப்புகளை வலியப்பெற வேண்டும். அறிமுகம், நன்றி, வரவேற்பு என எந்தப் பகுதி ஒப்படைக்கப்பட்டாலும் திறமையுடன் பேசப் பயிற்சி செய்ய வேண்டு”மென்றார். இதையெல்லாம் தானும் செய்து விட்டதாயும் இருந்தாலும் வெற்றி பெற்ற பேச்சாளர் ஆக முடியவில்லையெனக் கூறி, முதன் முதலில் மிகச் சிறந்த பேச்சாளர் என்ற பெயர் பெற்ற பேச்சின் போது அவரது உடை எப்படியிருந்தது என்றான்.

வசதி குறைவு, கிழிந்த வேட்டியைத் தைத்துக கட்டிக் கொண்டு பேசியதை அப்பேச்சாளர் நினைவு கூர்ந்தார். இளைஞனுக்கு ரகசியம் புரிந்ததாய் எண்ணி மகிழ்ந்தான். அவனும் கிழிந்த வேட்டியைத்தைத்துக் கட்டிக் கொண்டு பேச ஆரம்பித்தான். அப்பொழுதும் அவனால் பெயர் பெற முடியவில்லை. இன்றைய நிலை இப்படித்தான் உள்ளது. இந்த நிலையை மாற்றினால்தானே தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் சாதிக்க முடியும். இல்லையென்றால் ஏதோ வந்தோம், போனோம் என்ற நிலைதான்.

துணிச்சலும் ஆர்வமும் இருந்தால் ஒத்தி வைப்பதை நாம் ஒத்தி வைக்கலாம். அதன் மூலம் தாழ்வு மனப்பான்மையைத் தவிர்க்கலாம். இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதற்கெல்லாம் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். எந்த எண்ணமாக இருந்தாலும், யாருடனும் பேசுவதாக இருந்தாலும், எந்தச் செயல் செய்வதாயிருந்தாலும் அவைகளை விரும்பினால்போதும், நூறுக்கு நூறு சதவீதம் விரும்பினால் மட்டுமே போதுமானது, இந்த விருப்பமானது உடல் செல்களைத் தூண்டி, மன ஆற்றலை அதிகரித்து குவித்து முடித்து வைக்கும்.


இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.


| Leave a Comment |