தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

நேரத்தை ஆக்கபூர்வமாகச் செலவிட்டாலே!





ஒரு கணவன் எப்போதுமே மனைவி சமைக்கும் காலை உணவில் திருப்திப் படுவதேயில்லை. இட்லி சுட்டால் ஏன் தோசை இல்லை என்பான். தோசை சுட்டால் ஏன் தோசை முறுகலாய் இல்லை என்பான். முறுகலாய் இருந்தால் ஏன் அப்பளம் போல் இருக்கிறது என்பான். தன் கணவனை எப்படி மகிழ்ச்சியாய் உண்ண வைப்பது என்பது மனைவிக்குத் தெரியவே இல்லை. தினமும் அவனுக்கு காலையில் ஒரு முட்டை வேண்டும். அதை பொரித்து வைத்தால் ஏன் அவிக்கவில்லை என்பான், வேகை வைத்துக் கொடுத்தால் ஏன் பொரிக்கவில்லை என்பான்.

பார்த்தாள் மனைவி, ஒரு நாள் ஒரு முட்டையை அவித்தாள். இன்னொரு முட்டையைப் பொரித்தாள். கணவனின் முன்னால் வைத்து விட்டு இன்றாவது திட்டு விழாது என காத்திருந்தாள். அவனோ இரண்டையும் பார்த்தான்.

“உனக்கு செய்றதை ஒழுங்கா செய்யத் தெரியாதா ? அவிக்க வேண்டிய முட்டையைப் பொரிச்சிருக்கே, பொரிக்க வேண்டியதை அவிச்சிருக்கே” என பொரிந்தான்.

மனைவிக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தீர்ப்பிடுதலும், கடுமையான விமர்சனங்களும் உறவுகளை உடைக்கும் வேலையைக் கட்சிதமாய்ச் செய்து விடுகின்றன. அவற்றுக்கு ஒட்ட வைக்கும் கலை தெரியாது. வெட்டி எறியும் கலை மட்டுமே தெரியும்.

உலகப் புகழ் இசைக்கலைஞர் பாப் மார்லே பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். “என் வாழ்க்கையைத் தீர்ப்பிட நீங்கள் யார் ? என்னை நோக்கி உங்கள் கைகளை நீட்டும் முன் உங்கள் கைகள் சுத்தமா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார் கடுமையாக.

அடுத்தவர்கள் மீது விமர்சனங்களை வைப்பதும், அவர்களை செல்லாக்காசுகள் என தீர்ப்பிடுவதும் மிகவும் எளிதான விஷயம். ஆனால் அது வெறுமனே ஒரு மனிதரைக் காயப்படுத்துமே தவிர உருப்படியாய் ஒன்றும் செய்யாது. அன்பைக் கட்டியெழுப்பாது. சமூகத்துக்குப் பயந்தராது. ஒரு உறவை உருவாக்காது. நமது மனதை அழுக்காக்கும் வேலையை மட்டுமே செய்யும்.

ஒரு விரலை நீ நீட்டும் போது நான்கு விரல்கள் உன்னை நோக்கியே நீண்டிருக்கும் எனும் வாக்கியத்தை நாம் பல முறை கேட்டிருப்போம். யாருமே பிழையற்ற புனிதர்கள் கிடையாது. தவறுகளுடன் கூடிய வாழ்க்கையே ஒவ்வொரு மனிதனுக்கும் இடப்பட்டிருக்கிறது. எனவே தான் அடுத்தவர்களை விமர்சிப்பது தேவையற்ற ஒன்றாகிவிடுகிறது.

“அடுத்தவன் கண்ணில் இருக்கும் தூசியை எடுக்க கை நீட்டும் முன், உன் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைக் கவனி’ என்கிறது பைபிள். நமது கண்ணில் கிடக்கும் மரக்கட்டையை மறைத்து விட்டு அடுத்தவனிடம் இருக்கும் தூசை எடுத்து உலகிற்கு விளம்பரம் செய்யவே நாம் பல முறை விரும்புகிறோம்.

ஒரு முறை ஒரு பெண்ணை இழுத்து வந்து இயேசுவின் காலடியில் போட்டார்கள். “இயேசுவே, இந்தப் பெண் விபச்சாரப் பாவம் செய்தாள். இவளைக் கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்பதே மோசேயின் கட்டளை. என்ன சொல்கிறீர்” என்றார்கள். நீர் பாவிகளின் பக்கம் நிற்கிறீரா ? யூதர்கள் பின்பற்றும் மோசேயின் கட்டளை தவறு என்கிறீரா ? அல்லது மோசேயின் பக்கம் நின்று உங்களுடைய கருணை இமேஜை கலைக்கப் போகிறீரா ? எனும் ஏராளமான உள் அர்த்தங்கள் அவர்களுடைய கேள்வியில் இருந்தது.

இயேசுவோ அமைதியாக ஒரே ஒரு வரியில் பதில் சொன்னார். “உங்களில் பாவம் இல்லாதவன் இவள் மேல் கல் எறியட்டும்”.

வந்தவர்கள் விலகிச் சென்றார்கள். எல்லோரும் பாவம் செய்தவர்களே. புனிதர்கள் என்று யாரும் இல்லை. பின் ஏன் தீர்ப்பிடவேண்டும் என திரிகிறீர்கள். மாறாக அன்பினால் பிறரை அரவணைக்கலாமே என்பதையே இயேசு அன்று போதித்தார்.

நம்முடைய வாழ்க்கையில் ஒரு நாளின் எவ்வளவு நேரத்தை அடுத்தவர்களைத் தீர்ப்பிடுவதற்காகச் செலவிடுகிறோம் ?

அவன் செய்றது எதுவுமே சரியில்லை, அவன் அப்படிச் செய்திருக்கக் கூடாது, அவன் நான் சொன்னதைக் கேட்டிருக்கணும், அவன் தேர்ந்தெடுத்த விஷயம் சரியில்லை, அவனோட உறவு சரியில்லை, அவனுக்குப் பிடித்திருக்கிற விஷயங்கள் நல்லதில்லை, அவனோட குணாதிசயம் சரியில்லை என அடுக்கடுக்காய் எவ்வளவு விமர்சனங்களை ஈவு இரக்கமில்லாமல் எறிகிறோம்.

அல்லது நம்மைச் சுற்றியிருக்கும் எத்தனை நபர்களை கிண்டல், நகைச்சுவை என விமர்சிக்கிறோம் ? மேலதிகாரியையோ, நம்மை விட உயரத்துக்குச் செல்லும் தோழனையோ வெறுப்புடன் குரூர நகைச்சுவைக்கு பலியாக்குகிறோம் ?

இவற்றைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு அந்த நேரத்தை ஆக்கபூர்வமாகச் செலவிட்டாலே வாழ்க்கை இனிமையாய் மாறிவிடும். என்னால் அடுத்த நபருக்கு என்ன நன்மை செய்ய முடியும் என கேள்வி எழுப்பினாலே வாழ்க்கை அர்த்தமாகிவிடும். எதுவுமே செய்ய முடியாதெனில் நமது மௌனத்தின் மூலமாக தவறுகளில் விழுவதிலிருந்தேனும் தப்பித்துக் கொள்ளலாம்.

நம்மைச் சுற்றிய மனிதர்கள் நம் பாகங்கள். அவர்கள் எதிர்பார்ப்பது நமது கடுமையான விமர்சனங்களையல்ல, நமது அன்பான கரத்தை என்பதைப் புரிந்து கொள்வோம். வெற்றி என்பது அடுத்தவர்களைத் தட்டிவைப்பதல்ல ! அடுத்தவர்களைத் தூக்கி விடுவது தான்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.


| Leave a Comment |