தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

நீ வெற்றி பெற வேண்டும் என விரும்பினால்..




வெற்றி என்பது மனதில் இருக்கிறது. நீ வெற்றி பெற வேண்டும் என விரும்பினால், உன்னை ஒரு வெற்றியாளனாய் இந்த வினாடியிலிருந்தே கருதத் துவங்கு.

வெற்றியின் துவக்கம் எது என்பதில் பலருக்கும் சந்தேகம் எழுகிறது. அடுத்தவர்கள் நமது கழுத்தில் சூட்டும் பூமாலை தான் வெற்றியின் முதல் படி என்கிறார்கள் பெரும்பாலானவர்கள். ஆனால் அது வெற்றியின் துவக்கமல்ல, வெற்றியின் அடையாளங்களில் ஒன்று என வைத்துக் கொள்ளலாம்.

உண்மையான வெற்றி நமது மனதில் நம்மை ஒரு வெற்றியாளராய்க் கருதிக் கொள்வதில் தான் இருக்கிறது. அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். தனது உருக்கு உடலாலும், நடிப்புத் திறமையாலும் ஹாலிவுட்டைக் கலக்கியவர். அதன் ஒரு படி மேலே போய் கலிபோர்னியாவின் கவர்னர் எனும் அந்தஸ்தையும் சூடிக் கொண்டவர்.. அவர் திரையுலகிற்கு வந்த காலத்தில் தோல்விகள் தான் மிகுந்திருந்தன.

“இனி என்ன செய்வதாய் உத்தேசம்” என்று ஒருமுறை அவரிடம் பேட்டியில் கேட்டார்கள். தோல்வியில் விழுந்து கிடக்கிறாயே, இனிமே வேற என்ன பொழைப்பைப் பார்க்கப் போறே எனும் தொனி அதில் இருந்தது. ஆனால் அர்னால்ட் தந்த பதில் உறுதியாய் இருந்தது.

“நான் ஹாலிவுட்டையே கலக்கும் நடிகனாவேன்”

எக்குத் தப்பான உடம்பு, சுவாரஸ்யமில்லாத குரல், எக்ஸ்ப்ரஷன் காட்டத் தெரியாது என்ன விமர்சிக்கப்பட்ட முகம் – இத்தனை சிக்கல்களோடு இருந்தாலும் அவருடைய தன்னம்பிக்கை மிக உயர்வாக இருந்தது !

“எந்த நம்பிக்கையில் இதைச் சொல்கிறீர்கள் ?” என்று கேட்டே விட்டார் பேட்டி எடுத்தவர்.

“என் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையில் தான்” என்றார் அர்னால்ட். அந்த நம்பிக்கை தான் அவரை நகர்த்திக் கொண்டு போய் படு பயங்கர வெற்றியில் உட்கார வைத்தது என்பதில் சந்தேகமில்லை.

நம் மீதான நம்பிக்கை என்பது நம்மை நேசிப்பதில் துவங்க வேண்டும். கண்ணாடியில் தெரியும் நமது பிம்பம் நமக்கு தன்னம்பிக்கையைத் தரவேண்டும். நம்மைப் பாராட்ட நாமே தவறினால் நம்மை இன்னொருவர் பாராட்டுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது.

தன்னை உயர்வாக நினைப்பவர்களே வெற்றி எனும் கோட்டை எட்டித் தொட்டிருக்கிறார்கள். தன்மீது முழு நம்பிக்கை இல்லாதவர்களோ தோல்வி எனும் ஆமை ஓட்டுக்குள் அடங்கிப் போய் விடுகிறார்கள். திறமை குறைவாக இருந்தாலும் நம்பிக்கை அதிகமாய் இருக்கும் மனிதர்களே வெற்றி பெறுகிறார்கள்.

ஓட்டாமல் பார்க்கிங்கில் பூட்டியே வைத்திருக்கும் ரேஸ் காரை விட, நம்பிக்கையுடன் ஓடும் மாட்டு வண்டி தான் இலக்கைச் சென்றடையும்.

சாரா பெர்னார்ட் என்றொரு நடிகை இருந்தார். 1844ல் பிறந்த இவர் பிரஞ்ச் நாடக உலகையும் திரையுலகையும் ஒரு காலத்தில் ஆட்சி செய்தவர். ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடைசிக் காட்சி. உணர்ச்சிபூர்வமாய் குதித்து நடிக்கையில் அவருடைய முட்டியில் காயம்படுகிறது. துரதிஷ்டவசமாக அந்தக் காயம் தீரவேயில்லை.

அவருடைய ஒரு காலையே இழக்க வேண்டியதாயிற்று ! புகழில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் ஒரு காலை இழந்தால் என்னவாகும் ? அத்துடன் அவருடைய கலை வாழ்க்கை அஸ்தமித்தது என நினைத்தார்கள். ஆனால் அவர் அசரவில்லை. அதன் பின்பும் மரணம் வரை தனது வசீகரக் குரலாலும், நடிப்பாலும் பிரஞ்ச் உலகையே வசீகர வலைக்குள் வைத்திருந்தார். உலகம் கண்ட பிரமிப்பூட்டும் நடிகைகள் பட்டியலில் எப்போதும் இவருக்கு முதன்மை இருக்கை உண்டு.

தான் ஏதோ ஒரு வகையில் ஸ்பெஷலானவன். என் குணாதிசயங்களும், திறமைகளும் எனக்கு மட்டுமே எனும் சிந்தனை இன்று பலருக்கும் வருவதேயில்லை. “காலையில் கண்ணாடியில் முகம் பார்க்கும் போது உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது தான் அன்றைய தினம் முழுதும் உங்களோடு கூடவே வரும்” என்பதுதான் உளவியலின் பால பாடம்.

தன்னை உயர்வாக நினைப்பது என்பது தற்பெருமையோ, அதீத நம்பிக்கையோ அல்லது சோம்பேறித் தனத்தையே கொண்டு வராமல் இருக்க வேண்டும். இவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை நுணுக்கமாய்க் கண்டறியுங்கள்.

தன்னம்பிக்கை என்பது சுவரொட்டி போல ஒரு பொது இடத்தில் ஒட்டப்படத் தேவையில்லை. ஒரு ஆழ்கடல் அமைதி போல உள்ளுக்குள் இருப்பதே சிறந்தது. அந்த மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

வெற்றியை நோக்கி நீங்கள் பயணியுங்கள். வெற்றி பெறுவதற்கு என்னென்ன தேவை என்பதை ஆராயும் முன்னர் ஒரு வினாடி நிதானியுங்கள். கண்ணாடியின் முன்னால் நின்று உங்களையே பாருங்கள். இந்தச் செயலை உங்களால் நிச்சயம் செய்ய முடியும் என நம்புங்கள். உங்களுடைய நம்பிக்கையின் வேர்கள் வலுவடையும். நம்பிக்கையின் வேர்களே செயல்களின் கிளைகளைத் தாங்கிப் பிடிக்க முடியும் !

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.



| Leave a Comment |