தன்னம்பிக்கை வளர்க்க சில ஆலோசனைகள்
விடாமுயற்சி, கடின உழைப்பு, திட்டமிடல் போன்ற பல குணநலன்கள் கூறப்படலாம். ஆனால் அவை எல்லாமே 'தன்னம்பிக்கை' என்ற அடித்தளத்திலிருந்து தான் உருவாகி வெளி வருகின்றன என்கிறார்கள் அறிஞர்கள். தன்னம்பிக்கை என்பது ஓர் உந்து சக்தி வாழ்வதற்கும், வாழ்வில் உயர்வதற்கும், எல்லோருக்கும் தன்னம்பிக்கை இருக்கிறதா என்றால் இருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால் அது போதுமான அளவு இருக்கிறதா என்றால் இல்லை. நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் தன்னம்பிக்கை நிரம்பப்பெற்றவர்கள் சோர்வு அடைவதில்லை.
துவண்டு போவதில்லை. தோல்வியானது நம்மைத் துவண்டு போகச் செய்கிறது என்றால், நம்முடைய தன்னம்பிக்கையின் அளவு குறைவாக இருக்கிறது என்று பொருள். தாழ்வு மனப்பான்மை, தம்முடைய முயற்சியின் மீது நம்பிக்கையின்மை, மற்றவர்களுடைய வெற்றியைக் கண்டு வெதும்புதல், சோம்பேறித்தனம், மற்றவர்களோடு கலகலப்பாக இல்லாமல் இருத்தல் போன்றவை தன்னம்பிக்கை குறைவாக இருப்பதின் வெளிப்பாடு ஆகும்.
உங்கள் பலம், பலவீனம் இவைகளைச் சரியாகப் பட்டியலிடுங்கள். உங்கள் வாய்ப்பு களையும் அவைகளைப் பயன்படுத்துவதில் உள்ள தடைகளையும் பட்டியலிடுங்கள். நீங்கள் பட்டியலிட்டுள்ள பலவீனங்களில் சிலவும், தடைகளில் சிலவும் உண்மையிலேயே பலவீனமோ அல்லது தடையோ அல்ல என்பதை உணரலாம். எஞ்சியுள்ள பலவீனங்களையும், தடைகளையும் வெல்வதற்குண்டான முயற்சியில் முழுமூச்சுடன் இறங்குங்கள். இதற்கு உங்கள் பலங்களையும், வாய்ப்புகளையும் ஏற்கனவே உங்களிடம் இருக்கும் தன்னம்பிக்கையையும் பயன் படுத்துங்கள்.
இவ்வாறு உங்கள் பலத்தைக் கூட்டி, பலவீனத்தைக் கழித்து, வாய்ப்பினைப் பெருக்கி, தடைகளை வகுத்தால் தன்னம்பிக்கை தானாக வளரும். பலவீனங்களைக் குறைத்துத் தடைகளைத் தகர்க்கும் போது உங்கள் பலங்களும், வாய்ப்புகளும் தன்னம்பிக்கையை பலமடங்கு அதிகப்படுத்தும். இந்த தன்னம்பிக்கை இருந்தால் தேர்விலும் ஜொலிக்க முடியும்.
தன்னம்பிக்கையின் சின்னம் | Leave a Comment |