தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

உணர்ச்சிபூர்வமா முடிவெடுக்காம, அறிவுப்பூர்வமாக முடிவெடுங்க





இளவேனிலின் மடியில் அழுதபடி படுத்திருக்கும் பத்மஜாவின் தலை கேசத்தை கோதி விட்டான்.இளவேனில், வயது, 28, தலித் வாலிபன். தனியார் கல்லுாரியில் துணை பேராசிரியராக பணிபுரிபவன். திராவிட நிறம். சுருள் தலைகேசம், பாரதி மீசை.பத்மஜா, 22 வயது, உயர் ஜாதி பெண். இளவேனில் ஆசிரியராக பணிபுரியும் கல்லுாரியில், இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு படிப்பவள்.

தமிழை நேசிக்கும் இருவருக்குள்ளும் காதல் பூத்தது.பத்மஜாவின் காதல் தெரிந்து, வீட்டில் பூகம்பம் பூத்தது.பத்மஜாவை கல்லுாரிக்கு அனுப்பாமல், வீட்டினுள் பூட்டி வைத்தனர். ஒரு நள்ளிரவில், இளவேனிலும், பத்மஜாவும் வீட்டை விட்டு வெளியேறி, இளவேனிலின் நண்பன் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.இளவேனிலும் - பத்மஜாவும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். வாடகைக்கு வீடு தேடி, காதல் ஜோடி தெருத் தெருவாய் அலைந்தது. கடைசியில், சண்முகசுந்தரம் இரக்கப்பட்டு, தன் மாடி போர்ஷனை கொடுத்தார்.

விடிந்தால் தீபாவளி...''வேனில்... நாம் இருவரும், பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்திருந்தால், தலை தீபாவளி கொண்டாடுவதற்கான முன்னேற்பாட்டில் மூழ்கி இருப்போம். ஊரெங்கும் பட்டாசு வெடிக்கும் சத்தம். எல்லார் முகங்களிலும் குதுாகலம், கும்மாளம், கொண்டாட்டம். நாம் மட்டும் அழுது வீங்கிய முகத்துடன் துரதிர்ஷ்டசாலிகளா?''கதவு தட்டும் சத்தம் கேட்டது.பத்மஜாவும் - இளவேனிலும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். கண்ணீரை துடைத்துக் கொண்டாள், பத்மஜா.யாராக இருக்கும்... என் பெற்றோர் யாராவது அடியாட்களை அனுப்பி இருக்கின்றனரா அல்லது கதவு தட்டப்படுவது போல ஒரு பிரமையா?மீண்டும் கதவு தட்டப்பட்டது.

ஒரு கட்டையை பாதுகாப்புக்கு எடுத்துக் கொண்டான் இளவேனில். மெதுவாக, பூனை பாதம் வைத்து கதவுக்கு நடந்தான். கதவை சரேலென திறந்து, கட்டையை ஓங்கினான்.''தம்பி... அடிச்சிடாதே... வயசானவங்க, தாங்க மாட்டோம்... உங்களை பார்க்க, 'ஹவுஸ் ஓனர்' சண்முகசுந்தரம், இதே தெருவில் குடியிருக்கும் முஸ்லிம் பெரியவர் ஜிப்ரீல், கிறிஸ்தவ பெரியவர் மார்ட்டின் மூவரும் வந்திருக்கிறோம்.''''என்னை மன்னிச்சிடுங்க... யாரோன்னு நினைச்சிட்டேன்... உள்ளே வாங்க!''மூவரும் உள்ளே வந்தனர்.''எப்படிம்மா இருக்க பத்மஜா?'' என்றார் சண்முகசுந்தரம்.சிரிக்க முயன்று தோற்றாள், பத்மஜா. அழுகை சீறிக்கொண்டு வந்தது.

''ஒத்த குரங்கா, தனி மரமா நாங்க ரெண்டு பேரும் நிக்கிறோம்... தலை தீபாவளி, எங்களுக்கு எட்டாக்கனியா ஆகிப்போச்சு,'' என்று விசும்பினாள்.''பத்மஜா... உங்க வீட்டுல இருந்து உனக்கு போன் வந்துச்சா?''''ஆமா... உன் மேல, எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. மனசை தேத்திக்கிட்டு உன் புருஷனை கூப்பிடுறோம்... இப்ப, நீ மட்டும் கிளம்பி வா, தீபாவளி கொண்டாடிட்டு போலாம்... உன்னால் தனியா வர முடியாதுன்னா, காரை அனுப்பவான்னு என் அப்பா கேக்கறாரு.''''நம்பாதே... உன் அப்பா பேசுறது எல்லாம் பசப்பு வார்த்தை. அவர் வார்த்தையை நம்பி, நீ உன் வீட்டுக்கு போனா, உன்னை ஆணவ கொலை பண்ணிடுவாங்க... உன் கைபேசி, 'சிம்'மை துாக்கிப் போடு... இரு தரப்பு சொந்த பந்தங்கள் கண் உறுத்தற மாதிரி அவங்க முன்னாடி ஊர் சுத்தாதீங்க... பெற்றோர் சார்பா, துாது வந்தால், திருப்பி அனுப்புங்க... உங்க ரெண்டு பேருக்குள்ளயும் எந்த கருத்து வேற்றுமையும் ஏற்படாம பார்த்துக்கங்க... அஞ்சு வருஷம் தலைமறைவு வாழ்க்கை வாழுங்க,'' என்றார், சண்முகசுந்தரம்.

''இந்த தெரு மக்களை மீறி, யாரும் வந்து உங்களை எதுவும் பண்ணிட முடியாது. நாங்க மூவரும், உங்களை காக்கும் தெய்வங்கள்!''இளவேனிலை கட்டியணைத்து, ''யேசப்பா துணை!'' ஆறுதல் கூறினார், மார்ட்டின்.சண்முகசுந்தரம், பத்மஜாவின் தலை கேசத்தை கோதி விட்டார். ''தனியா நிற்கிறோம்ன்னு அழாத... உன் அப்பா ஸ்தானத்துல நான் இருக்கேன்... விஜயலட்சுமி எனக்கு இளைய மகள்ன்னா, நீ எனக்கு மூத்த மகள். நீ எனக்கு மகள் என்றால், இளவேனில் எனக்கு மருமகன். நீங்க இருவரும் என் வீட்டுக்கு வந்து தலை தீபாவளி கொண்டாடுங்க... தலை தீபாவளி தரும் அனைத்து மகிழ்ச்சியையும், தகப்பன் ஸ்தானத்தில் நின்று நான் அள்ளித் தருகிறேன். இது, வெறும் உதட்டில் இருந்து வரும் வார்த்தைகளல்ல... என் இதயத்திலிருந்து கிளம்பும் சத்திய வார்த்தைகள்!''''நன்றி அப்பா!'' சண்முகசுந்தரத்தின் தோளில் சாய்ந்தாள்.முதுகில் தட்டிக் கொடுத்தார்.''ரொம்ப சந்தோஷம் மாமா,'' மிழற்றினான், இளவேனில்.''அம்மா பத்மஜா... தம்பி இளவேனில்... தலை தீபாவளிய சண்முகசுந்தரம் வீட்டுல கொண்டாடுங்க... முதல் கிறிஸ்துமசை, வான் கோழி பிரியாணியோட எங்க வீட்டுல கொண்டாடுங்க... நீங்க விரும்பினா நள்ளிரவு பிரார்த்தனையில் கலந்துகொள்ள தேவாலயம் வரலாம்... கிறிஸ்துமஸ் தாத்தா, உங்கள் இருவருக்கும் ஏராளமான பரிசு பொதிகளை வாரி வழங்குவார்!''பத்மஜாவும், இளவேனிலும் முகம் மலர்ந்தனர்.

சோகம் தலைதெறிக்க ஓடி மறைந்தது.''பத்மஜா - இளவேனில் பச்சா... நீங்க ரெண்டு பேரும், எங்க வீட்டோட இணைஞ்சு ரம்ஜான் கொண்டாடலாம். நோன்புகள் நோற்க விரும்பினால் நீங்க நோற்கலாம். விசேஷ கூட்டுத் தொழுகையில், உங்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்வேன்!''''மும் மதமும் கூடி, ஆறுதல், தேறுதல் சொல்றது, எங்களுக்கு யானை பலத்தை தருது,'' ஆனந்த கண்ணீர் வடித்தான், இளவேனில்.''இருவரும், தரை தளத்தில் இருக்கும் என் வீட்டுக்கு வாங்க!'' இருவரையும் அழைத்துச் சென்றார், சண்முகசுந்தரம்.சண்முகசுந்தரத்தின், 20 வயது மகள் விஜயலட்சுமி நின்றிருந்தாள். அவள், சென்னை கல்லுாரி விடுதியில் தங்கி, பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கிறாள். தீபாவளி கொண்டாட, சொந்த ஊருக்கு வந்திருக்கிறாள்.''வாங்கக்கா... வாங்க மாமா!'' வாய் நிறைய வரவேற்றாள், விஜயலட்சுமி.கிண்ணத்தில், நல்லெண்ணெயும், சிகைக்காய் துாள் பொட்டலமும் நீட்டினார் சண்முகசுந்தரம்.வாங்கினான் இளவேனில்.''வரிசை வைக்கிறேன்... வாங்கிக்கங்க,'' பட்டுப் புடவை, ஜாக்கெட், பாவாடை, பட்டு வேட்டி, பட்டு சட்டை, வெற்றிலை, பாக்கு, 1,000 ரூபாய் ரொக்கம், பட்டாசு மற்றும் இனிப்பு, 'கிப்ட் பேக்'குகள் அனைத்தையும் ஒரு தாம்பாளத்தில் வைத்து, சண்முகசுந்தரமும் அவரது மனைவியும் நீட்டினர்.

இருவரின் கால்களிலும் விழுந்து, ஆசிர்வாதம் பெற்றனர், இளவேனில் - பத்மஜா ஜோடி.''பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க மக்களே!''''இன்று போல் என்றும் வாழ்க!'' குதுாகலித்தாள் விஜயலட்சுமி.''அல்லே லுாயா!'' என, உணர்ச்சி பெருக்கால் கூவினார், மார்ட்டின்.''எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்!'' இரு கைகளை வானத்துக்கு உயர்த்தினார், ஜிப்ரீல்.இளவேனிலும் - பத்மஜாவும், குளித்து, புத்தாடை உடுத்தி, கம்பி மத்தாப்பு கொளுத்தி மகிழ்ந்தனர். சங்கு சக்கரம், புஸ்வாணம், 1,000 வாலா வெடி கொளுத்தினர்.காலையில், தீபாவளிக்காக தயாரிக்கப்பட்ட டிபன் சாப்பிட்டனர்.தெரு மக்கள், ஒவ்வொருவராய் வந்து புதுமண தம்பதியை வாழ்த்தினர். அவரவர் வீடுகளில் தயாரித்த இனிப்பு வகைகளை ஊட்டி விட்டனர்.தீபாவளி கொண்டாட்டம் தொடர்ந்தது.மதியம், 3:00 மணி.சற்றே கண்ணயர்ந்தார் சண்முகசுந்தரம். காலடி அரவம் கேட்டு, கண்களை திறந்தார்.விஜயலட்சுமி நின்றிருந்தாள்.''என்னம்மா விஜி?''''உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.''''சொல்லும்மா.''''காதல்ன்னா உங்களுக்கு அறவே பிடிக்காதுன்னு நினைச்சிருந்தேன். ஆனா, நீங்க காதல் ஜோடிக்கு, வாடகைக்கு இருக்க வீடு குடுத்திருக்கீங்க... தலை தீபாவளி கொண்டாட, அவங்களுக்கு ஏற்பாடும் செஞ்சு குடுத்திருக்கீங்க... எப்படிடா சொல்றதுன்னு பயந்துகிட்டு இருந்த எனக்கு தைரியம் வந்துருச்சு!''''என்னம்மா... புது குண்டை துாக்கிப் போடுற?''''நான், என் வகுப்பு தோழனை காதலிக்கிறேன்... எங்க காதலுக்கு பச்சைக் கொடி காட்டுங்கப்பா,'' கைகளை பிடித்த மகளின் கைகளை உதறி தள்ளினார்.

''என்ன உளர்ற... என் மகள் ஒருநாளும் காதலிக்க மாட்டா.''''ஐம்புலன்களையும் பூட்டியா உங்க மகளை காலேஜுக்கு அனுப்பிச்சீங்க... மத்த வயது வந்த பெண்களுக்கு என்ன ஆசாபாசம் இருக்குமோ, அதுதானே எனக்கும் இருக்கும்.''''ஒரு நாளும் இதை நான் அனுமதிக்க மாட்டேன்!'' ஓடி, அரிவாளை எடுத்து திரும்பினார். ''காலேஜுக்குள்ள புகுந்த உடனே காதலிக்க தோணுதோ... அவன் என்ன ஆளுகளோ... உன்னை, கண்டம் துண்டமா வெட்டி போட்டுர்றேன்.''சண்முகசுந்தரத்தின் மனைவி ஓடி வந்தாள்.''ஊரார் காதலிச்சா, விசில் அடிச்சு வரவேற்கறீங்க... உங்க மக காதலிச்சா, கசாப்பு போட துடிக்கறீங்க... இப்படித்தான் உலகத்துல எல்லா தகப்பன்மாரும் இருக்கீங்க... உங்களுக்குள்ள இருக்கற மிருகத்தை தட்டி எழுப்ப தான் நானும், உங்க மகளும் ஒரு நாடகம் போட்டோம்... விஜயலட்சுமி யாரையும் காதலிக்கவில்லை!''வெட்கி தலை குனிந்தார் சண்முகசுந்தரம்.''சாரி... கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்!''''அப்பா... இப்ப நான் யாரையும் காதலிக்கல... பின்னாளில் யாரையும் காதலிக்க மாட்டேன்னு என்னால் உத்தரவாதம் தர முடியாது. 

அப்படி நான் யாரையும் காதலிச்சா, உணர்ச்சிபூர்வமா முடிவெடுக்காம, அறிவுப்பூர்வமாக முடிவெடுங்க.''''உனக்கு தகுதியானவன், சம நிலையில் வைத்து அங்கீகரிப்பவன், ஆயுளுக்கும் உன்னை வைத்து பாதுகாப்பவன், எந்த மதத்தை சேர்ந்தனாய் இருந்தாலும், நீ காதலித்தால் உலக நிச்சயம் திருமணம் செய்து வைப்பேன்.''''தலை தீபாவளி கொண்டாட்டத்தில், மகளின் எதிர்கால காதலுக்கு இப்போதே பச்சை கொடி காட்டிய தந்தையின் மன பக்குவம் அடக்கம்,'' என்றனர், இளவேனிலும் - பத்மஜாவும்.''ஹாப்பி ஹாப்பி தீபாவளி!'' என்றனர், அனைவரும் பிரபஞ்சத்தின் உச்சியை தொடரும் கோரஸில். 


இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்



| Leave a Comment |